This Article is From Aug 20, 2018

கேரளாவில் கர்பிணிப் பெண்ணை ஹெலிகாப்ட்டர் மூலம் காப்பாற்றிய திக் திக் நொடிகள்..!

கேரளாவில் மழையின் அளவு குறைந்திருந்தாலும், இன்றும் அங்கு மழை பெய்து தான் வருகிறது

Aluva:

கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி முதல் இன்று வரை விடாது மழை பெய்து வருகிறது. இதுவரை கனமழை காரணமாக கிட்டத்தட்ட 400 பேர் இறந்துள்ளதாகவும், 7 லட்சம் பேர் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவப் படை, கடற்படை, பேரிடர் மீட்புப் படை என பல்வேறு படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அலுவாவில் ஒரு கர்ப்பமான பெண்ணை கடற்படையினர் ஹெலிகாப்ட்டர் மூலம் காப்பாற்றியது வைரலாகி வருகிறது.

காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு இடுப்புக்குக் கீழ் செயலிழந்துவிட்டதாகவும் இதனால், அவரைத் தூக்கும் போது ஹெலிகாப்ட்டர் சற்று அசைந்தால் கூட பெண்ணின் உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற நிலை இருந்தது.

சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்ட்டருடன் விரைந்த கடற்படையினர், பெண்ணின் வீட்டுக்கு மேலேயே நிலை கொண்டு நின்றனர். இதையடுத்து, கடற்படையின் ஒரு வீரர் கயிறு வழியாக கீழே இறங்கி, பெண்ணைத் தன் உடலோடு அணைத்தபடி மேலே கொண்டு வந்தார். இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் ஹெலிகாப்ட்டர் ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கிறது. இதனால், பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த வீடியோவை இந்திய கடற்படையினர் பகிர்ந்துள்ளனர். ஹெலிகாப்ட்டரை திறம்பட செலுத்திய கேப்டன் பி.ராஜ்குமாருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்துள்ளது அரசு.

இப்படி பல கதைகள் கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பமான பெண்ணை ஹெலிகாப்ட்டர் மூலம் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றிய அரை மணி நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்தது. பலரை நெகிழச் செய்தது அந்த சம்பவம். தற்போது, மீண்டும் அதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் மழையின் அளவு குறைந்திருந்தாலும், இன்றும் அங்கு மழை பெய்து தான் வருகிறது.

.