This Article is From Feb 10, 2020

ஆ.ராசா கேட்ட நெத்தியடி கேள்வி… அதிர்ந்த நாடாளுமன்றம்… கொந்தளித்த பாஜக எம்பிக்கள்!

எழுந்த கூச்சல் குழப்பங்களைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து பேசிய ராசா, “எங்களைப் பேசவிட்டால்மட்டும்தான் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியும்,” என்றவர்,

ஆ.ராசா கேட்ட நெத்தியடி கேள்வி… அதிர்ந்த நாடாளுமன்றம்… கொந்தளித்த பாஜக எம்பிக்கள்!

கொதிப்படைந்த பாஜக எம்பிக்கள், அமளியில் ஈடுபட்டனர். சில அமைச்சர்களும் ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தினமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அப்படி இன்று திமுக எம்பி ஆ.ராசா, இட ஒதுக்கீடு பற்றி எழுப்பிய கேள்வி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 

ராசா பேசுகையில், “தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்தே, இட ஒதுக்கீடுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது…” எனப் பேச ஆரம்பித்தார். 

இதனால் கொதிப்படைந்த பாஜக எம்பிக்கள், அமளியில் ஈடுபட்டனர். சில அமைச்சர்களும் ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இப்படி எழுந்த கூச்சல் குழப்பங்களைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து பேசிய ராசா, “எங்களைப் பேசவிட்டால்மட்டும்தான் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியும்,” என்றவர்,

தொடர்ந்து, “உங்கள் அரசாங்கம் என்று சொன்னால் நான் மத்திய அரசை சொல்லவில்லை. உத்தரகாண்டில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி வருகிறேன். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நடக்கும் வழக்கு ஒன்றில், ‘எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையும் கிடையாது, சட்ட சாசன உரிமையும் கிடையாது' என்ற வாதத்தை வைத்துள்ளனர். இது இட ஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இதற்கு முன்னரே உச்ச நீதிமன்றத்தில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது பிறப்புரிமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து மாநில, மத்திய அரசுகளிடம் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உத்தரகாண்டில் இருக்கும் பாஜக அரசு வாதம் வைத்துள்ளது.

இதை சரிசெய்ய வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் அல்லது புதிய சட்ட நடைமுறையை அமல் செய்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியினர்களின் உரிமையை மீட்க வேண்டும்,” என்று சடசடவென பேசி முடித்தார். அவர் உரையை நிறைவு செய்த பின்னரும் அவையில் தொடர்ந்து கூச்சல்கள் எழுந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள் ராசாவுக்கு ஆதரவாக எதிரக்குரல் எழுப்பினார்கள். 

.