நேற்று தலைமை ஆசிரியர் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னிலையில் மர்மக் கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது
Bengaluru: பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியரை, 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. நேற்று தலைமை ஆசிரியர் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னிலையில் மர்மக் கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூருவின் புறநகரான அக்ரஹாரா தசாரஹல்லி என்கிற இடத்தில் இருக்கும் ஹாவனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் 60 வயதாகும் ரங்கநாதன். நேற்று அவர் 10வது படிக்கும் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, 6 பேர் கொண்ட மர்மக் கும்பல், ரங்கநாதனை சரமாரியாக தாக்கிக் கொன்றுள்ளது.
ரங்கநாதனை தாக்கிவிட்டு, மர்மக் கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து துப்பு கிடைத்ததின் பேரில், கும்பலைச் சேர்ந்த ஒருவரை, பெங்களூருவின் மஹாலக்ஷ்மி லே-அவுட் பகுதியிலிருந்து கைது செய்துள்ளது போலீஸ். கும்பலைச் சேர்ந்த நபரை கைது செய்ய காவல் துறை முயன்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் அந்த நபரை, காலில் சுட்டுப் பிடித்துள்ளது. அவருக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஹாவனூர் பள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நிலப் பிரச்னைக்காக இந்த கொடூர செயல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.