This Article is From Jan 03, 2019

பும்ரா என்னும் பூதம்..! #1YearOfBumrah

டி20 கிரிக்கெட்டில் தங்கமாக பார்க்கப்படும் ‘பெர்ஃபெக்ட் யார்க்கர்’ பும்ராவின் பிரதான ஆயுதமாக இருந்தது

பும்ரா என்னும் பூதம்..! #1YearOfBumrah

‘இன்னும் சில மாதம் பொறுத்திருங்கள். அவர்தான் உலகின் பெஸ்ட் பவுலராக வருவார்' என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் இப்போதே அடித்துச் சொல்கிறார். உலகின் முன்னணி பவுலர்களே பந்து வீச அஞ்சும் விராட் கோலி, ‘நான் பும்ராவை எதிர்கொள்ள விரும்பமாட்டேன். அவருக்கு ஒரு ரிதம் கிடைத்துவிட்டால், அதை சமாளிப்பது எந்த பேட்ஸ்மேனுக்கும் சுலபமல்ல. பும்ராவின் அசாத்திய திறமையும் துல்லியமும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு நற்செய்தியல்ல' என்று புகழாரம் சூட்டுகிறார்.

 

03u0nu9o

இப்படிப்பட்ட பாராட்டுகளெல்லாம் கிரிக்கெட் வரலாற்றில் பல வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவான சில குணாதிசயங்கள் இருக்கும். 6 அடி அல்லது அதற்கு மேலும் உயரமானவர்களாகவும், மிகவும் வேகமான ரன்-அப் கொண்டவர்களாகவும், ஆக்ரோஷமான பவுலிங் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை உள்ளவர்களாகவும் இருப்பர். அக்தர், பிரெட் லீ, ஆலன் டோனல்ட், வால்ஷ் என சொல்லிக் கொண்டே போகலாம். இதை வைத்துப் பார்த்தால் ஓராண்டுக்கு முன்னர் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ‘பெஸ்ட் பவுலருக்கான' எந்தத் தகுதியும் இல்லை.

மெலிந்த உடல், சுழற்பந்து வீச்சாளரை விட சில அடிகளே அதிகம் கொண்ட ரன்-அப், மீடியம்-பேஸரைப் போன்ற பவுலிங் ஆக்‌ஷன், சாந்தமான உடல் மொழி என ‘பெஸ்ட் பவுலருக்கான' எந்தவித அடிப்படையும் இல்லாதவர் பும்ரா. இருந்தும் அவர்தான் இந்தியாவின் லீட்-பவுலர். ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் மண்ணிலேயே கல்தா கொடுத்தவர். அவர்தான் எதிர்கால இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பந்து வீச்சாளராக இருக்கப்போகிறவர்.

 

hof6gv38

ஜாகிர் கான் விலகிய பின்னர், அவர் இடத்தை நிரப்ப வெகு நாட்களாக இந்திய அணி சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவரையல்ல, அவரைவிட மேன்மையான ஒரு திறமைசாலி கிடைத்திருக்கிறார். காலம், தன் தலைவனைத் அதுவாகவே தேர்ந்தெடுக்கும் என்று சொல்வார்கள். அப்படி காலம் கை காட்டியுள்ளவரே பும்ரா. வேகப்பந்து வீச்சாளர் என்றாலே தலையை சொரியும் இந்திய அணியிலிருந்து உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார் அவர்.

2014 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக போட்டிகள் விளையாடியதின் மூலமாக பும்ரா, உலகிற்கு அறிமுகமானார். டி20 கிரிக்கெட்டில் தங்கமாக பார்க்கப்படும் ‘பெர்ஃபெக்ட் யார்க்கர்' பும்ராவின் பிரதான ஆயுதமாக இருந்தது. இதனால் அவர், தரமான டி20 கன்டென்ட் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்டார்.

 

ss52jmm

ஆனால் பிசிசிஐ அவரை ஒருநாள் பவுலராகவும் பார்த்தது. 2016, ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் பும்ரா, முதன்முதலாக இந்தியாவுக்காக விளையாடினார். அதே மாதத்தில் ஆஸி.,-க்கு எதிராக நடந்த டி20 போட்டியிலும் விளையாடினார். குறுகிய ஓவர் போட்டிகளில் பும்ரா ஆரம்பம் முதலே கலக்கினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை தனது இலக்காக வைத்து கடுமையாக உழைத்தார்.

 

1qouiot

அதன் பலன்… 2018, ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார். இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், கிரிக்கெட் வல்லுநர்களின் ஃபேவரைட்டாக உருவெடுத்துள்ளார் பும்ரா. சிம்பிளாக சொல்வதேன்றால் சைக்கிள் ஓட்ட கிடைத்த சந்தில் பும்ரா ஃப்லைட் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ஃப்லைட்டில் இந்திய அணியை அலுங்காமல் குலுங்காமல் வெற்றி நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

.