இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, பின்னர் வழக்கிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்
New Delhi: சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
சொராபுதீன் ஷேக் என்ற ஒரு சிறிய குற்றவாளி, குஜராத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சொராபுதீனைக் கொன்றதற்கு குஜராத் போலீஸ், ‘அவன் ஒரு தீவிரவாதி' என்று குற்றம் சாட்டியது. சொராபுதீனின் மனைவி கவுசி பி-யும் கொல்லப்பட்டார்.
என்கவுன்ட்டர் நடக்கும் போது, சொராபுதீன் தம்பதியுடன் இருந்த துல்சிராம் பிரஜபதி, வழக்கிற்கான சாட்சியாக மாறினார். அவரும் ஓராண்டு கழித்துக் கொல்லப்பட்டார்.
சில ரகசியங்கள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே, இந்தக் கொலைகள் செய்யப்பட்டதாக புலன் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசியல்வாதிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, பின்னர் வழக்கிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
அதேபோல குஜராத்தில் இருக்கும் கீழ்நிலை நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து விசாரிக்கையில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த பல அதிகாரிகளை விடுவித்து உத்தரவிட்டது. அப்படி இருந்தும், இன்னும் 22 அதிகாரிகளின் பெயர் விடுவிக்கப்படாமல் உள்ளது. அவர்கள் குறித்துத்தான் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.