மேடையில் உரையாற்றிவிட்டு, கன்னியாகுமரி தொகுதி எம்.பி., வசந்தகுமார் தனது ஆதரவாளர்களுடன் கீழே வந்தார். அப்படி வந்தவரை பலர் சூழ்ந்து கொண்டு, “சார் போட்டோ… போட்டோ…” என நச்சரித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்திதான் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. காமராஜர் அரங்கத்தோடு நிறைவடைந்த ஊர்வலத்தை அடுத்து, கட்சியின் முக்கிய புள்ளிகள் உரையாற்றினர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி-க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மேடையில் உரையாற்றிவிட்டு, கன்னியாகுமரி தொகுதி எம்.பி., வசந்தகுமார் தனது ஆதரவாளர்களுடன் கீழே வந்தார். அப்படி வந்தவரை பலர் சூழ்ந்து கொண்டு, “சார் போட்டோ… போட்டோ…” என நச்சரித்தனர். இதைப் பார்த்த வசந்தகுமார், “சரி வாங்க. ஒரு க்ரூப் போட்டோ எடுத்துப்போம்” என்றார். தொண்டர்களும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சிலர் வசந்தகுமாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து நகர்ந்தார் வசந்தகுமார். அப்போது சில தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, “என்ன சார் அவங்களோட மட்டும் போட்டோ எடுத்துக்கிட்டீங்க. எங்க கூடலாம் போட்டோ எடுக்க மாட்டீங்களா..?” எனக் கேள்வி எழுப்ப, பலர் அவரை ரவுண்டு கட்டினர்.
வசந்தகுமார் சிரித்துக் கொண்டே, “சரி வாங்கப்பா, எல்லார் கூடயும் போட்டோ எடுத்துப்போம்” எனத் தொண்டர்களை சமாதானப்படுத்தினார். தொண்டர்களின் இந்த திடீர் அன்பால் திக்குமுக்காடினார் எம்.பி.,
அவரிடம் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம், “எதற்கு ராகுல் மட்டும்தான் காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று சொல்கிறீர்கள்?”, “எங்கள் தலைவர் தொடர வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு உள்ளது” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து, “ராகுல் காந்தியை விட்டால் கட்சியில் வேறு தலைவர்களே இல்லையா. அவர்தான் தலைவர் பதவி வேண்டாம் என்கிறாரே. பிறகு ஏன் நீங்கள் வற்புறுத்துகிறீர்கள்..?” என்றதற்கு, “இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் தெரிந்த முகம் எது. காங்கிரஸ் கட்சி என்றால் எந்த முகம் அனைவருக்கும் நியாபகம் வரும். ராகுல் காந்திக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அவரை இழந்தால், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழும்” என்று முடித்துக் கொண்டு கூட்டத்தை நோக்கிப் நடையைக் கட்டினார்.