This Article is From May 27, 2020

“இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது!”- மத்திய அரசை சூசகமாக விமர்சித்த ப.சிதம்பரம்

"பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூபாய் 1,86,650 கோடிதான்"

“இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது!”- மத்திய அரசை சூசகமாக விமர்சித்த ப.சிதம்பரம்

“நான் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் பரிந்துரைகளை இந்த அரசு ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்திருந்தேன்"

ஹைலைட்ஸ்

  • மத்திய அரசு சமீபத்தில் ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு பற்றி அறிவித்தது
  • இந்த நிதித் தொகுப்பு குறித்து கறாரான விமர்சனங்களை முன்வைத்தார் சிதம்பரம்
  • அரசு காங்கிரஸின் யோசனைகளைக் கேட்கும் நிலை வரும்: சிதம்பரம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு முடங்கிப் போயுள்ளது. இதை சரிக்கட்ட மத்திய அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதித் தொகுப்புப் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். 

இந்த நிதித் தொகுப்பில் சொல்லிக் கொள்ளும்படி பொருளாதார மீட்பு அறிவிப்புகள் இல்லையென காங்கிரஸ் தரப்பும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரமும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்கும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். 

சிதம்பரம், “நான் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் பரிந்துரைகளை இந்த அரசு ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பிடிவாதமான அரசுக்கு அனுபவம் மற்றும் முறையான முடிவுகள் எடுக்கும் தரப்பை மதிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை.

தற்போது அரசு, நாட்டின் ஏழை மக்களுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்ய முன்வந்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தாளின் வந்த தலையங்கமே இதற்கான முதல் சான்று.

அதேபோல நிதிப் பற்றாக்குறையின் ஒரு பகுதியை பணமாக மாற்றுவது குறித்து ஆர்பிஐ-க்கு மத்திய அரசு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி-யிலிருந்து 10 சதவிகிதம், சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் என்று அரசு சொன்னது. அதன்படிதான், 20 லட்சம் கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 

ஆனால் இந்த சீர்திருத்தம் குறித்து சிதம்பரம், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூபாய் 1,86,650 கோடிதான் 

ரூபாய் 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்” என்று குற்றம் சாட்டினார். 

மேலும் இந்தத் திட்டம் மூலம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் கைகளில் நேரடியாக பணம் சென்று சேரப் போவதில்லை என்றும், அப்படி செய்தால் மட்டுமே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் சிதம்பரம் கூறியிருந்தார். 
 

.