இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டனர்
Christchurch (New Zealand): யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமானது நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம். அது குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் NDTV-யிடம் பிரத்யேகமாக பேசியுள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதி மிகவும் புகழ் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதேபோல் அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள லின்வுட் ஆவ் மசூதிக்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஃபைஸல் சயீத் என்பவர் NDTV-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “100 சதுர அடி அளவுக்கு இருக்கும் ஒரு மசூதியில் நாங்கள் தொழுகை செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து சரமாரியாக சுடத் தொடங்கினார். இதைப் போன்ற நேரத்தில், உங்கள் இதயம் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகமாகத் துடிக்கும். உங்களால் எதுவுமே செய்ய முடியாதபடி ஆகிவிடும்.
இப்படிப்பட்ட நேரத்தில்தான், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய அந்த நபரை பின்னால் இருந்து மடக்கிப் பிடித்தார். இதனால், அந்த நபரின் துப்பாக்கி கீழே விழுந்தது. அவரும் மசூதியிலிருந்து தப்பித்து ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த நபர் மட்டும், தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கவில்லை என்றால், இந்த சம்பவம் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும். நானும் உங்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவரை கண்டுபிடித்து நன்றி கூறுவேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
சயீத், நியூசிலாந்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து பேசுகையில், “மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நியூசிலாந்து இப்போதும் மிகவும் பாதுகாப்பான நாடுதான். ஒரு சம்பவத்தை வைத்து நான் எந்த முடிவுக்கும் வர மாட்டேன். நியூசிலாந்தை விட்டு நான் வெளியேற வாய்ப்பே இல்லை” என்றார் திட்டவட்டமாக.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு செல்வதற்கு முன்னர் சயீத், மும்பையில் வசிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நியூசிலாந்த் துப்பாக்கிச்சூடு சம்பவம்: 9 இந்தியர்கள் மாயம் என தகவல்!