This Article is From Dec 08, 2018

"அந்த கடைசி ஓவர்... ஒரு சிக்ஸர்" - மறைக்கப்பட்ட கம்பீர் எனும் 'சைலண்ட் சாம்பியன்'

நாளை கடைசியாக களமிறங்கும் கம்பீர் மீண்டும் நினைவில் வைக்கும் அளவுக்கு ஒரு இன்னிங்ஸை ஆடலாம் என்று எதிர்பார்க்கலாம்

2009-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் அது. இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஃபாலோ ஆன் விளையாடிக் கொண்டிருந்தது. அன்று 11 மணி நேரம் ஆடி 436 பந்துகளைச் சந்தித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக நீண்ட போராட்டமான இன்னிங்ஸை ஆடினார் ஒரு இந்திய வீரர். ஆம் கவுதம் கம்பீர் எனும் அந்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இறுதிப் போட்டியில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி கடைசி ஓவரை ஜோஹிந்தர் ஷர்மாவுக்கு கொடுத்தார். ஸ்ரீஷாந்த் கேட்ச் செய்தார். இந்தியா வென்றது என செய்திகள் குவிந்தன. ஆனால் முதல் இன்னிங்ஸில் தனி ஒருவனாக கம்பீர் 75 ரன்கள் குவித்தார். இது தான் அணியை கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. இதுதான் உண்மையில் கோப்பையை வென்று தந்தது.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. அந்தப் போட்டியில் 20 ரன்களுக்குள்ளாக சச்சினும், சேவாக்கும் அவுட் ஆக இந்தியாவின் பாதி வீடுகளில் தொலைகாட்சி அணைக்கப்பட்டது. பின்னர் இந்தியா வென்றதும் இந்த முறையும் தோனியின் அந்த வெற்றிக்கான ரன்களை சிக்ஸராக அடித்தது கண்ணுக்குள்ளேயே நின்றது. 91 ரன்கள் குவித்தார் தோனி. 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா கோப்பையை வெல்ல தோனி காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. அன்றும் 97 ரன்கள் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்ட கம்பீர் மறைந்து போனார்.

mfusmcmo

இந்தியாவின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தன்னுடைய பெயரில் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை. ஆனால் கம்பீர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு 2 முறை கோப்பையை வென்று தந்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளுக்கு பின்னால் மறைந்து போன வீரர் தான் கவுதம் கம்பீர். இவர் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ரஞ்சி கோப்பையில் வரும் வியாழனன்று ஆந்திராவுக்கு எதிராக தான் ஆடும் போட்டிதான் தனது கடைசி கிரிக்கெட் போட்டி என்று அறிவித்துள்ளார்.

097dc8fo

58 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள். 22 அரைசதங்களுடன் 4154 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.

147 ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள். 34 அரைசதங்களுடன் 5238 ரன்களை குவித்துள்ளார்.

37 ஒருநாள் போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 932 ரன்களை குவித்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து 10324 ரன்களை குவித்துள்ள கம்பீர், இதே சாதனை நிகழ்த்தியுள்ள 13 இந்திய வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் கம்பீரின் சராசரி இந்தியாவை விட வெளிநாடுகளில் ஆடும்போது அதிகம்.

8s7mjm88

2009-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ``சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர் என்றால் அது கம்பீர்தான்” என்று சேவாக் ஒருமுறை கூறியிருந்தார்.

‘2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டும். மெதுவாக பீல்டிங் செய்கிறார் கம்பீர்' என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 2013-க்கு பிறகு ஒருநாள் போட்டியில் கம்பீர் ஆடவில்லை. முரளி விஜய் டெஸ்ட்டில் வலு பெற்ற போது கம்பீர் மறைய துவங்கினார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு கம்பீருக்கு டெஸ்ட் வாய்ப்பு இல்லை.

பாகிஸ்தான் வீரர்களான அக்தர், அப்ரிடி, அக்மலுடன் களத்தில் ஆக்ரோஷமான சண்டை, ஐபிஎல் போட்டியின் போது விராட் கோலியை முறைத்து கைகலப்பாகாமால் தப்பியது என ''ஆங்ரி பேர்டாக'' மாறும் கம்பீர் இனி வர்ணனையாளர்கள் வரிசையில் இருப்பார். இந்தியா பெற்ற மிகச்சிறந்த இடதுகை துவக்க வீரர் கம்பீர் என்பதில் சந்தேகமில்லை.

s5ls9sv8

சத்தமில்லாமல் சாதனைகளை செய்தும், ஒற்றை மேஜிக்கல் விஷயங்களுக்காக தனது சாதனைகள் மறைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டும், இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வெல்ல ‘சைலன்ட்' காரணமாக இருந்த கம்பீரின் கிரிக்கெட் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. நாளை கடைசியாக களமிறங்கும் கம்பீர் மீண்டும் நினைவில் வைக்கும் அளவுக்கு ஒரு இன்னிங்ஸை ஆடலாம் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள் கம்பீர்.

.