This Article is From Aug 31, 2018

பாலிவுட் பாடலுக்கு கூட்டாக ஆட்டம் போட்ட இந்திய - பாக்., ராணுவ வீரர்கள்..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப்படும் எஸ்.சி.ஓ சார்பில், தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பயிற்சி ரஷ்யாவில் ஒருங்கிணைக்கப்பட்டது

பாலிவுட் பாடலுக்கு கூட்டாக ஆட்டம் போட்ட இந்திய - பாக்., ராணுவ வீரர்கள்..!
New Delhi:

ரஷ்யாவில் கூட்டாக பயிற்சி எடுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள், பயிற்சி முடிந்த பின்னர் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு கூட்டாக ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப்படும் எஸ்.சி.ஓ சார்பில், தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பயிற்சி ரஷ்யாவில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு ‘பீஸ்ஃபுல் மிஷன் 2018’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

எஸ்.சி.ஓ அமைப்பு, கடந்த 2001 ஆம் ஆண்டு ஷாங்காயில் நிறுவப்பட்டது. அப்போது சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் அந்த அமைப்பில் சேர்ந்தன. கடந்த 2017 ஆம் ஆண்டுதான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்.சி.ஓ அமைப்பில் சேர்ந்தன.

இந்நிலையில் முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ரஷ்யாவில் கூட்டுப் பயிற்சி எடுத்துள்ளன. எஸ்.சி.ஓ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் 3,000 பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கெடுத்தனர். இந்தியா சார்பில் 200 வீரர்கள் கலந்துகொண்டனர்.

பயிற்சி முடிந்த பிறகு, வீரர்கள் அனைவரும் ஒன்றாக இருந்த போது, பாலிவுட் பாடல் ஒன்று போடப்பட்டுள்ளது. அப்போதுதான் இந்திய மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள், ஒன்றாக சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர். அது வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்தப் பயிற்சியில் பங்கெடுத்தது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஹூவா சன்யங், ‘எஸ்.சி.ஓ நடத்தும் இந்தப் பயிற்சிக்கு இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக வந்து பங்கெடுத்திருப்பதை வரவேற்கிறோம். இந்த நடவடிக்கை என்பது ஆசிய அளவிலும் உலக அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.