Stalin vs Edappadi: "தொடர்ந்து தமிழகத்தின் மிகப் பெரும் கட்சியாக திமுக தன்னை நிரூபித்து வருகிறது"
Stalin vs Edappadi: இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 6 ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டம் என்பதால் பல்வேறு காரசார விவாதங்கள் அவைக்குள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலேயே வாதப் போர் வெடிக்கின்றது. ஸ்டாலின் கேள்வி கேட்பதும் அதற்கு முதல்வர் பதில் சொல்வதும், வாதம் வைப்பதும் அதற்கு எதிர்வாதம் வைப்பதும் என்று சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இல்லை.
சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலுக்குத் தேர்தல் திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. அது ஒரு தேய்பிறைக் கட்சியாக மாறியுள்ளது என்று சர்ச்சையைக் கிளப்பினார்.
அதற்கு உடனேயே ஸ்டாலின், “2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் திமுகவில் அதிகரித்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் மிகப் பெரும் கட்சியாக திமுக தன்னை நிரூபித்து வருகிறது. அப்படி இருக்கையில் நாங்கள் தேய்பிறை இல்லை. வளர்பிறை,” என்றார்.
இது குறித்து சட்டசபைக் கூட்டத்திலும் பேசிய ஸ்டாலின், “வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போதுதான், உண்மையான வளர்பிறை எது என்பதற்கான அர்த்தம் உங்களுக்குப் புரியும்,” என்று ஆளுங்கட்சியினரைப் பார்த்துப் பேசினார்.
உடனே எழுந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு. மத்தியில் யார் ஆட்சி புரிய வேண்டும் என்பதை மக்கள் அந்தத் தேர்தல் மூலம் முடிவெடுப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் என்பது, அந்தந்த உள்ளூர்ப் பகுதிகளில் யார் நல்லது செய்வார்கள் என்று நம்புகிறார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால் சட்டமன்றத் தேர்தல் என்பது, யார் நல்லாட்சிக் கொடுப்பார்கள் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். அந்த வகையில் வருகின்ற தேர்தலிலும் அதிமுகவுக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்,” என்று முடித்தார்.