Dhaka: வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பத்தரிகையாளரான சுபர்ணா நோடி, அவரது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்தா டிவி என்கின்ற தனியார் செய்தி நிறுவனத்துக்கும், ஜக்ரோதா பங்களா என்கின்ற செய்தி தாளுக்கும் சுபர்ணா வேலை செய்து வந்துள்ளார். அவர் பாப்னா மாவட்டத்தில் இருக்கும் ராதாநகரில் தனது 9 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். சுபர்ணா, தன் கணவரிடமிருந்து சமீபத்தில் தான் விவாகரதுத்துக் கோரியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுபர்ணா கொலை செய்யப்பட்டது குறித்து பாப்னா மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி, இப்னே மிசான், ‘செவ்வாய் கிழமை இரவு சுமார் 10:45 மணி அளவில் 10 முதல் 12 பேர் இரு சக்கர வாகனத்தில் சுபர்ணா வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் கதவை தட்டிய உடன், சுபர்ணா திறந்துள்ளார். உடனடியாக கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சுபர்ணாவை சரமாரியாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. சுபர்ணா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர். அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புத் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் எஸ்.பி, கவுதம் குமார் பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
சுபர்ணாவின் மரணத்தை அடுத்து, பாப்னா மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள், ‘குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.