ராஜீவ் காந்தி வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது
அனுஷ்யா ஏர்னஸ்ட் என்கிற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) 1991-ல் வெடிகுண்டு மூலம் கொன்ற போது பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அப்போது, காயங்களுடன் உயிர் தப்பிய அவர், அந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்கொலைப் படை மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருக்கு அருகில் இருந்த காவலர்களில் அனுஷ்யாவும் ஒருவர். ‘என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. இந்த வழக்கின் குற்றவாளிகள் சிறையில் சந்தோஷமாக இருக்கும் போது, நான் இங்கு தினம் தினம் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கிறேன். பல குடும்பங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களை அந்த கோர சம்பவத்தால் இழந்தன. பலரது வாழ்க்கை சீரழிந்தது. எங்கள் வலியையும் வேதனையையும் யாரும் மதிப்பதில்லை. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எல்லோரும் பயங்கரவாதிகள். அவர்கள் நம் பிரதமரைக் கொன்றவர்கள். அவர்களை விடுதலை செய்வது மிகவும் ஆபத்தானது. ரிலீஸ் ஆனால், அவர்கள் மற்றத் தலைவர்களை குறிவைக்க வாய்ப்புள்ளது’ என்று கதறுகிறார் அனுஷ்யா. சம்பவம் நடந்த போது அனுஷ்யா துணை ஆய்வாளராக இருந்தார். ஏடிஎஸ்பி-யாக அவர் ஓய்வு பெற்றார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பிட்டிருந்த (convicts) 7 பேரில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.
அனுஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள், ‘குண்டு வெடிப்பின் போது இறந்தவர்கள் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். அதே நேரத்தில் எங்கள் குடும்பங்களும் மிக அதிக வலியையும் வேதனையையும் அனுபவித்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த வழக்கை விசாரித்த மூத்த அதிகாரியே, விசாரணையின் போது பல குளறுபடிகள் நடந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இனியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது சரியல்ல’ என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார், ‘தமிழக மக்கள் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர்’ என்று கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், ‘எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக ஆளுநருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையும், எழுவரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துத் தான் ஆக வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
‘இந்த விவகாரம் குறித்து நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பேன். இது குறித்து மத்திய அரசிடம் நான் கருத்து கேட்கவில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.