Dindigul, Tamil Nadu: திண்டுக்கல் மாவட்டத்தில், மூக்கு உடைந்த பெண்ணிற்கு மருத்துவமனை உதவி பணியாளர் ஒருவர் தையல் போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமீப காலமாகவே, மருத்துவமனையில் பணிபுரியும் உதவி ஊழியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செய்திகள் அதிகமாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கலில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி, கொடைக்கானல் அருகே ஏற்பட்ட விபத்தில், 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர், காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும், காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தவர் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து என்.டி டிவிக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சுகாதாரத் துறை இயக்குனர், மருத்துவர் மாலதி, “வீடியோ குறித்த விசாரணை நடைப்பெற்று வருகிறது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்பே, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.