ஹைலைட்ஸ்
- இந்த புதிய சர்ச்சை குறித்து யூ.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு விளக்கம் அளிக்கவில்லை
- புதிய ஆதார் உதவி எண், பல போன்களில் தானாக சேவ் ஆகியுள்ளது
- ட்விட்டரில் நெட்டிசன்கள் இது குறித்து பொங்கி வருகின்றனர்
New Delhi: ஆதார் கார்டு தொடர்பான பழைய சர்ச்சைகளே இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது, ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது ஆதார் கார்டை நிர்வகிக்கும் யூ.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு.
ஆதார் கார்டுக்கான உதவி எண் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 1800-300-1947 என்றிருந்த ஆதார் உதவி எண், தற்போது 1947 என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல ஸ்மார்ட் போன்களில் இந்த உதவி எண், தானாகவே சேவ் ஆகியுள்ளது. இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பிரளயத்தைக் கிளப்பியுள்ளது. ‘எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமான ஸ்மார்ட் போனில், அவரின் அனுமதி இல்லாமல் ஒரு உதவி எண் சேவ் செய்யப்படலாம்?’ என்பது தான் நெட்டிசன்கள் மத்தியில் விவாதமானது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர் எலியட் ஆண்டர்சன், ‘பல நிறுவனங்களைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் பயனர்கள், ஆதார் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யாத போதிலும், ஆதார் உதவி எண் அவர்களின் போனில் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?’ என்று யூ.ஐ.டி.ஏ.ஐ அமைப்பை கேள்வி கேட்டுள்ளார்.
சில நெட்டிசன்கள், ‘இது விளையாட்டல்ல. எனக்கு கவலையாக இருக்கிறது. நான் இந்த எண்ணை சேமிக்கவில்லை. பிறகு எப்படி வந்தது. நீங்களும் செக் செய்து பாருங்கள்’ என்று ட்வீட்டியிருந்தார்.
ட்ராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா கடந்த மாதம் 28 ஆம் தேதி அவரின் 12 இலக்க ஆதார் எண்ணை ட்விட்டரில் பகிரங்கமாக வெளியிட்டார். அப்போது அவர், ‘இப்போது என் ஆதார் எண்ணை வெளியிட்டுவிட்டேன். இதை வைத்து என்ன செய்துவிட முடியும்?’ என்று சவால்விட்டார். ஆனால், இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பல நெட்டிசன்கள் ஷர்மாவின் 14 வித தனிப்பட்ட தகவல்களை லீக் செய்தனர்.
தற்போது இன்னொரு சர்ச்சையில் மாட்டியுள்ளது ஆதார் கார்டு. இது குறித்து யூ.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு எந்த வித விளக்கத்தையும் தற்போது வரை தரவில்லை.