This Article is From Jun 23, 2018

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம்

கவுன்சிலிங்கின் போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆதார் கார்டு சமர்பிப்பது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம்

ஹைலைட்ஸ்

  • மற்ற மாநில மாணவர்கள் போலி ஆவணங்கள் சமர்பிப்பதாக குற்றச்சாட்டு
  • இதை சரிகட்ட ஆதார் கட்டாயம் என நீதிமன்றம் தீர்ப்பு
  • வழக்கு 2 வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது
Chennai: தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகின்றன. இந்நிலையில், கவுன்சிலிங்கின் போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆதார் கார்டு சமர்பிப்பது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. எனவே, சீக்கிரமே அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அவர்கள் வாழ்விடம் குறித்து போலியான ஆவணங்கள் சமர்பித்து தமிழகத்தில் மருத்துவ சீட் பெற்று விடுகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், அவர்களுக்கே சென்று சேர்வதை உறுதி செய்ய, கவுன்சிலிங்கின் போது ஆதார் சரிபார்ப்பும், ஆதார் கார்டின் நகலும் பெறுவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள், கவுன்சிலிங்கிற்கு வருபவர்களுக்கு இந்தத் தகவலை தெரியபடுத்தியிருக்க வேண்டும். மேலும் இரண்டு நாட்களுக்குள் செய்திகள் வாயிலாகவும், அதிகாரபூர்வ இணையதளங்களிலும் இந்தத் தகவல் குறித்து குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் மற்ற மாநில மாணவர்களுக்கு சீட் கொடுப்பது தவிர்க்கப்படும்’ என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு இரண்டு வாரத்துக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதி கூறியுள்ளார். 

மற்ற மாநிலங்களில் கவுன்சிலிங்கின் போது ஆதார் கார்டு சரிபார்ப்பு கட்டாயமாக ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
.