எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விடுதிக்கு நள்ளிரவில் ஆதித்யா தாக்கரே வருகை தந்தார்.
Mumbai (Maharashtra): மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ள கட்சி எம்எல்ஏக்களை ஆதித்யா தாக்கரே நள்ளிரவில் நேரில் சந்தித்தார்.
நேற்று இரவு சொகுசு விடுதிக்கு வந்த ஆதித்யா தாக்கரே, அங்கு உள்ள எம்எல்ஏக்களுடன் இரவு ஒரு மணி வரை ஆலோசனையில் ஈடுபட்டார். வொர்லி தொகுதியில் வெற்றி பெற்ற ஆதித்யா தாக்கரேவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால், இன்னும் 2 நாட்களுக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியிலே தங்க வைக்கப்பட உள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் உத்தவ் தாக்கரே வீட்டில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எம்எல்ஏக்கள் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின.
காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது.
சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.