சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
New Delhi: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் உதவியாளர், டெல்லியில் பட்டப் பகலில், ஒரு நபரை அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ-வின் உதவியாளரான சவுரப் ஜா, நபரை அடிக்கும்போது டெல்லி போலீஸார் அருகில் இருப்பதும் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
டெல்லியின் கிராரி பகுதியில், நவம்பர் 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. வீடியோவில் ஜா, சட்டை இல்லாத ஒரு நபரை போட்டு விளாசுகிறார். அவர் போலீஸின் லத்தியை வைத்து விளாசுவதும் வீடியோவில் தெரிகிறது.
இந்த வீடியோ குறித்து டெல்லி போலீஸ் தரப்பு, ‘அன்று அடி வாங்கிய நபரின் பெயர் விகாஸ். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. நவம்பர் 14 அன்று விகாஸ், ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதனால், அருகிலிருந்த போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் நண்பர்களுடன் விகாஸ், அந்த இடத்திலிருந்து தப்பித்த ஓட முற்பட்டான். ஆனால், அவனை மக்கள் பிடித்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். கும்பலிடமிருந்து விகாஸை நாங்கள் தான் காப்பாற்றினோம்' என்று விளக்கம் அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், விகாஸின் சகோதரரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் விகாஸின் தாய், சவுரப் ஜாவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜா, பெயரை வழக்கிலிருந்து எடுக்க, 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை விகாஸின் குடும்பம் கொடுக்காததை அடுத்து, அந்தக் கோபத்தை விகாஸ் மீது ஜா காட்டிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விகாஸின் குடும்பம், போலீஸில் புகார் அளித்துள்ளது. ஆனால், இதுவரை சவுரப் ஜா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.