This Article is From May 06, 2020

ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாட்டினால் தகவல் கசிவா..? - மத்திய அரசு முக்கிய விளக்கம்

Aarogya Setu App: இந்தியளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 1,694 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள். 

Aarogya Setu App: இந்த காரணத்தினால் செயலியைப் பயன்படுத்தும் சுமார் 9 கோடி இந்தியர்களின் தகவல்கள் பறிபோகலாம் என்று புகார் சுமத்தப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • ஆரோக்ய சேது செயலியை மத்திய அரசு உருவாக்கியது
  • கொரோனா டிராக்கில் செயலியாக ஆரோக்ய சேது உள்ளது
  • ஆரோக்ய சேதுவை பயன்படுத்தச் சொல்லி மத்திய அரசு தொடர் பிரசாரம்
New Delhi:

மத்திய அரசு உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் டிராக்கிங் செயலியான ஆரோக்ய சேதுவில் எந்த தகவல் கசிவும் ஏற்படவில்லை என்று அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எத்திகல் ஹேக்கர், ஆரோக்ய சேதுவில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால் தகவல் கசிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த காரணத்தினால் செயலியைப் பயன்படுத்தும் சுமார் 9 கோடி இந்தியர்களின் தகவல்கள் பறிபோகலாம் என்று புகார் சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் அரசு, விளக்கம் கொடுத்துள்ளது. 

எலியட் ஆல்டர்சன் (Elliot Alderson) என்னும் பெயர் கொண்ட அந்த பிரபல ஹேக்கர், கடந்த செவ்வாய் கிழமை, “ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறது. 9 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும். ராகுல் காந்தி சொன்னது சரிதான்,” என்று கூறினார். 
 

இந்த ட்வீட் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அரசு தரப்பிலிருந்து தன்னை தொடர்பு கொண்டார்கள் என்று எலியட் ஆல்டர்சன் கூறினார். 

அவர் தொடர்ந்து, “9 கோடி இந்தியர்களின் மருத்துவம் சார்ந்த தகவல்களை இப்படி கசியவிட வாய்ப்பு தருவது சரி கிடையாது. எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. சரி செய்தாலும், செய்யாவிட்டாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் நான் அதை வெளியிட்டு விடுவேன்,” என எச்சரிக்கை விடுத்தார். அரசு கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

முன்னதாக காங்கிரஸின் ராகுல் காந்தி, “அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது செயலி, மக்களை வேவு பார்க்கும் கருவி,” என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

குறிப்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “தினமும் ஒரு பொய். இந்த செயலி மூலம் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு நல்லது செய்வது பற்றி சிலருக்குப் புரியாது,” என்று ராகுலை விமர்சித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஆரோக்ய சேது குறித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தற்போது அந்த செயலியைப் பயன்படுத்துவதை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. 

நொய்டாவில் வாழும் மக்கள் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு. 

அதேபோல கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கன்டெயின்மென்ட் மண்டலத்தில் இருப்பவர்கள் அனைவரும், ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள், தாயகம் திரும்பியவுடன் அவர்களும் ஆரோக்ய சேதுவை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரோக்ய சேது, 30 கோடி டவுன்லோடுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கோடு மத்திய அரசு செயலாற்றி வருகிறது. 

இந்தியளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 1,694 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள். 
 

.