பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஆவில் பால் விலை. இந்த விலையேற்றத்துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு அதிமுக தரப்பு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பால் வகைகளும் அட்டைதாரர்களுக்கும், அதிகபட்ச விற்பனைக்கும் அரை லிட்டருக்கு 3 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு பற்றி பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழக சட்டப்பேரவையிலேயே இந்த விலை உயர்வு குறித்து முதல்வர் அறிவித்தார். அப்போதே அவர், கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, நுகர்வோருக்கான விலையும் உயர்த்தப்படும் கட்டாயத்தில் அரசு உள்ளது என்று முதல்வர் பேரவையிலேயே அறிவித்தார். அப்போதே அவர், அனைத்து கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எல்லா கட்சிகளும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டன. இப்போது அரசியல் காரணங்களுக்காக மாற்று நிலைப்பாடு எடுத்துள்ளனர்” என்று உஷ்ணமானார்.