ஷில்லாங் ஐ.ஐ.எம்.-ல் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கலாமின் உயிர் பிரிந்தது
Shillong: பாரத ரத்னா அப்துல் கலாமின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு மேகாலயா மாநிலம் ஷில்லாங் ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் பயோபிக் திரையிடப்படுகிறது.
இந்த பயோபிக்கை நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஷில்லாங் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மாணவர்களின் முன்பு உரையாற்றிக் கொண்டிருந்தபோது தான் அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.ஐ.எம். வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு திரையிடப்படும் ஆவணப்படத்தில் பலரும் அறியாத உண்மைகள் இடம்பெற்றுள்ளன. கலாமுக்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் மட்டும் அல்லாமல், கலாமின் அரிய பேச்சுகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஆவணப்படம் ஐ.ஐ.எம். வளாகத்தினுள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மத்தியில் திரையிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1931 அக்டோபர் மாதம் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பிறந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அவர் அளித்த பங்களிப்பின் மூலம், மற்ற உலக நாடுகள் இந்தியாவை மரியாதையுடன் பார்க்கத் தொடங்கின. இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 2002-ல் நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நல பணிகள் பலவற்றை மேற்கொண்டதால் அவருக்கு மக்கள் ஜனாதிபதி என்ற பெயரும் கிடைத்தது.