அபிநந்தனைப் போல மீசை வைத்துக் கொள்ளும் இளைஞர்.
New Delhi: விங் கமாண்டர் அபிநந்தனைப் போன்று மீசை வைத்துக் கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அபிநந்தனின் மீசை இந்தியா முழுக்க பிரபலம் ஆகி வருகிறது. இந்த ஸ்டைல் மீசைக்கு ஆங்கிலத்தில் கன் – ஸ்லிங்கர் என்று பெயராம்.
அபிநந்தனைப் போன்று மீசை வைத்துக் கொண்ட இளைஞர்கள், அந்த கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பிடியில் இருந்து விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டதும், அவரது மீசைதான் பலரது கவனத்தை ஈர்த்தது. அவர் மீது கொண்ட அன்பு காரணமாக இளைஞர்கள் அவரைப் போன்று மீசை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள அவுட்லுக் என்ற சலூன் கடையை நடத்தி வரும் சாந்த் முகமது என்பவர் கூறும்போது, ‘' அபிநந்தன்தான் நம்முடைய ரியல் ஹீரோ. எனவேதான் அவரது ஸ்டைலை நாங்கள் பிரபலப்படுத்தி வருகிறோம். முன்பு விளையாட்டு பிரபலங்கள், சல்மான் கான், ஷாரூக் கான் போன்றோரின் ஸ்டைலை வாடிக்கையாளர்களுக்கு வைத்தோம். ஆனால் இன்றைக்கு அபிநந்தனைப் போன்று மீசை வைக்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகின்றனர். அதுபோன்று நாள்தோறும் குறைந்தது 10 பேராவது மீசையை மாற்றிச் செல்கின்றனர்'' என்றார்.
அபிநந்தனைப் போன்று மீசை வைத்துக் கொண்ட சமீர் கான் என்பவர் கூறும்போது,'' இது அபிநந்தன் சாரின் ஸ்டைல். நாங்கள் அவரை பின்பற்றுகிறோம். இந்த ஸ்டையில் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. அவர்தான் எனக்கு ஹீரோ'' என்றார்.
இமேஜ் மற்றும் பர்சனாலிட்டி துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் அளித்த பேட்டியில், ‘' அபிநந்தனின் மீசை ஸ்டைல் நாடு முழுக்க பிரபலம் அடைந்துள்ளது. அவருக்கு அந்த மீசை கச்சிதமாக பொருந்தியுள்ளது. அவர் மீது அன்பு கொண்ட மக்களுக்கு அபிநந்தனின் மீசை ஒரு பிராண்டாக மாறியிருக்கிறது'' என்று கூறியுள்ளனர்.
சில சலூன் கடைகளில் 'அபிநந்தன் மீசை' வைத்து தரப்படும் என்றே விளம்பரம் செய்யப்பட்டிருப்பதை காண முடிகிறது. அவரை கவுரவப் படுத்தும் வகையில் அமுல் நிறுவனம் கார்ட்டூன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார்.
பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, வெள்ளியன்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான்.
மேலும் படிக்க: பாகிஸ்தான் அதிகாரிகளால் அபிநந்தன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தகவல்