அபினந்தனின் பெற்றோர்கள் நேற்று சென்னையிலிருந்து டெல்லிக்குப் விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்
New Delhi: பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்நிலையில் அபினந்தனின் பெற்றோர்கள் நேற்று சென்னையிலிருந்து டெல்லிக்குப் விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். விமானத்தில் அவர்களுக்கு சக பயணிகள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
அபினந்தனின் பெற்றோர்களான முன்னாள் ஏர் மார்ஷல் எஸ்.வர்தமன் மற்றும் ஷோபா ஆகியோர், விமானத்தில் ஏறியவுடன் சக பயணிகள் கைத்தட்டி வரவேற்றனர். பலர் அவர்களை புகைப்படம் எடுத்தனர். அபினந்தனின் வீரத்துக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இந்த சம்பவம் இருந்துள்ளது.
இன்று அதிகாலை 1 மணி அளவில் அபினந்தனின் பெற்றோர்கள் வந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது.
பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்துடன் அபினந்தன் சண்டையிட்டபோது, எதிர்பாராத விதமாக அபினந்தனின் விமானம் விபத்துக்குள்ளாகி பாகிஸ்தான் பகுதியில் விழுந்துள்ளது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் தரப்பு பிடித்துள்ளது.
இன்று விடுவிக்கப்பட உள்ள அபினந்தனை, அவரது பெற்றோர் வர்தமன் மற்றும் ஷோபா ஆகியோர் நேரில் சென்று வரவேற்க உள்ளனர். டெல்லியில் தரையிறங்கிய இருவரும் அம்ரிஸ்டருக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்று மதியம் 2 மணி அளவில் அபினந்தன் வாகா எல்லைக்கு வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபினந்தன் குடும்பத்தின் பின்னணி மிகவும் சுவார்ஸ்யமானது. அவரது தந்தையான வர்தமன் மட்டுமல்ல, அவரது தாத்தாவான சிம்மக்குட்டியும் விமானப்படையில் இருந்துள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது, அவர் விமானப்படையில் சேவை ஆற்றியுள்ளார்.
வர்தமன் தற்போது நிலவும் சூழல் குறித்து, “அபி உயிரோடு இருக்கிறார். அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. மிகவும் தெளிவான மனநிலையுடன் இருந்துள்ளார். அவர் பாகிஸ்தான் தரப்பிடம் எப்படி பேசியுள்ளார் என்பதைப் பாருங்கள். அவர் உண்மையான ராணுவ வீரர். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று உணர்ச்சித் ததும்ப கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அபினந்தனிடம் பலமுறை குறுக்கு விசாரணை நடத்தியபோதும், ‘நான் அதைச் சொல்லக் கூடாது' என்று தீர்க்கமாக சொன்னார். அவர் மிகுந்த தைரியத்துடன் பேசியது, இந்தியர்களை பெருமையடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க: அதிகரித்த அழுத்தம்... இந்திய விமானியை விடுவிக்க சம்மதம் கூறிய இம்ரான் கான்!