அபினந்தன் வர்தமன் 2 நாட்களாக பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.
New Delhi: பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன் இன்று தாயகம் திரும்புவதை தொடர்ந்து அவருக்கு சமூகவலைதளங்களில் உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் #WelcomeHomeAbhinandan உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய போதும் அவர் தைரியத்துடன் செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் மிக்-21 ரக போர் விமனாத்தை இயக்கிய போர் விமானி அபினந்தன் எல்லை கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் அபிநந்தன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து பாராசூட் மூலம் தப்பித்து குதித்த அபினந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரையிரங்கியதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைவைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மத்தியில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்பது போன்றும், அவரிடம் பாக். ராணுவ வீரர்கள் கேள்வி கேட்பது போன்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அபினந்தனின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு தேநீர் வழங்கப்பட்டு அவரை முறையாக கையாள்வது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை முறையாக மரியாதையுடன் கையாள்வதாகவும், இதனை இந்தியா சென்றாலும் மாற்றி கூறமாட்டேன் என அபினந்தன் கூறினார்.
அப்போது, அவரிடம் அவர் இயக்கிய விமானம் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அது குறித்த தகவல்களை அளிப்பதற்கு தனக்கு அனுமதி இல்லை என துணிச்சலுடன் தெரிவித்தார் அந்த வீடியோவும் வைரலாக பரவியது.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய போதும் அபினந்தன் துணிச்சலுடன் பேசிய, அந்த குறிப்பிட்ட வீடியோவே சமூகவலைதளங்களில் அவரை ஹீரோவாக மாற்றியது.
உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகியுள்ளது. அபினந்தன் இந்திய திரும்புவதை அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாமை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை அழித்தது.
ஜெனிவா ஒப்பந்தத்தால், இந்திய விமானப்படை வீரரை திரும்ப அனுப்புவது பாகிஸ்தானுக்கு கட்டாயம் என இந்தியா கூறியுள்ளது.