This Article is From Mar 08, 2019

அபினந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்! பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை

இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கினர். இதைத்தொடர்ந்து மறுநாளே, இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினர்.

இந்தநிலையில், இந்திய விமானப்படை வீரர் சென்ற மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அபினந்தன் உயிர் தப்பினார். எனினும், பாகிஸ்தான் எல்லையில் அபினந்தன் தரையிரங்கியதால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அபினந்தனின் வீரத்தை பாராட்டும் விதமாக, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக சென்றும் வரவேற்றனர். தாயகம் திரும்பிய அபினந்தன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்தகுதி உறுதிபடுத்தப்பட்டவுடன் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார் என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் விமானத்தை துரத்திக்கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக அவர்கள் பிடியில் சிக்கிக் கொண்ட அபினந்தன் தன் உயிரையும் பெரிதுபடுத்தாமல் மிகப்பெரிய சாகசத்தை புரிந்துள்ளார். மோசமான சூழ்நிலையிலும், வீரத்தை வெளிப்படுத்தி மீண்டு வந்த விங் கமாண்டர் வீரர் அபினந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement