ராஜஸ்தானின் ஜோத்பூரில் அபிநந்தன் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
Jaipur: ராஜஸ்தான் மாநிலத்தின் 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. பாலக்கோட்டில் இந்திய ராணுவம் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான செய்திகள் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய விமானப்படையினர் பதிலடி தாக்குதலை நடத்தினர்.
பாலகோட் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் போர் விமானம் பாகிஸ்தானில் விழுந்தது. அவரை சிறைபிடித்த ராணுவத்தினர், அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதன்பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அபிநந்தனை மீட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அபிநந்தன் தேசிய அளவில் ஹீரோவாக பார்க்கப்பட்டார். இந்த நிலையில், அபிநந்தனின் வீர தீர செயல் குறித்த தகவல்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
9-ம் வகுப்பில் தேசிய பாதுகாப்பு - கலாசாரம் - வீர தீரம் என்ற தலைப்பு உள்ளது. இதில் இந்தியாவின் பாதுகாப்புக்கு போராடிய வீரர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அபிநந்தனின் பெயரும், அவரது வீரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.