This Article is From Dec 12, 2018

‘ஆப்கி பார்…’- மோடியை கேலி செய்த அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘ஆப்கி பார் கோ டி சர்கார்’ என்று இந்தியில் ட்வீட் செய்து மோடியை கிண்டல் செய்துள்ளார்

‘ஆப்கி பார்…’- மோடியை கேலி செய்த அகிலேஷ் யாதவ்

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது

Lucknow:

நேற்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்ததை அடுத்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர், மோடி அரசை கேலி செய்து கருத்துகள் தெரிவித்து வந்தனர். அதில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘ஆப்கி பார் கோ டி சர்கார்' என்று இந்தியில் ட்வீட் செய்து மோடியை கிண்டல் செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் 2 இடங்களால் பெரும்பான்மை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் பாஜக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.

தெலங்கானாவில், சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ், மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மிசோரமில் காங்கிரஸை வீழ்த்தி, மிசோ தேசிய முன்னணி அட்சி அரியணையில் அமர்ந்துள்ளது.

அகிலேஷ் யாதவின் ட்வீட்டுக்கான அர்த்தம், ‘இந்த முறை, நீங்கள் பதவி விலக வேண்டும்' என்பதாகும். 2017 ஆம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச தேர்தலில், மோடி தலைமையிலான பாஜக, 325 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அப்போது அகிலாஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தன. இதையடுத்து, பாஜக-வை வீழ்த்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்தனர்.

பாஜக-வை கேலி செய்த போதும், அகிலேஷ், காங்கிரஸ் குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். மேலும் கடந்த 21 ஆம் தேதி, தேசிய அளவில் இருந்த முக்கிய எதிர்கட்சிகள் டெல்லியில் நடத்திய சந்திப்பிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், 3 முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், இனி அதன் மதிப்பு எதிர்கட்சிகளுக்கு மத்தியில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

.