கருக்கலைப்புக்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
New Delhi: இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், கருக்கலைப்புக்கான காலம் நீட்டிக்கப்பட்டது பெண்களுக்கு மீண்டும் கருத்தரிப்பு செய்வதற்கான உரிமையை வழங்கும் என்று கூறினார்.
கருக்கலைப்புக்கான கால அளவை 20 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாவலனாக மத்திய அரசு செயல்படுகிறது. வளர்ச்சியை நிலையை எட்டிய பின்னர், கர்ப்பிணிக்கும் அவரது வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது மத்திய அரசின் கடமை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது கருக்கலைப்பான கால அவகாசம் நீட்டிக்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 1971-ல் கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டம் திருத்தம் செய்யப்படும். இதுதொடர்பாக மருத்துவ கருக்கலைப்பு திருத்த சட்ட மசோதா 2020, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.