தமிழ்நாட்டில் வேளான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்தில் போலி கணக்குகளை உருவாக்கி இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று விளக்கம் அளித்து இருக்கும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் இதுவரை 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், தமிழகம் முழுவதும் ரூ. 110 கோடி முதல் ரூ. 120 கோடி வைர முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுவரை 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஈடுபட்டவர்கள் யாராயினும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.