5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
New Delhi: நடந்து முடிந்துள்ள மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநில முடிவுகள் பாஜகவுக்கு சாதகம் இல்லாத நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானாவில் மாநில கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ''மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில மக்கள் அரசு அமைக்கும் வாய்ப்பை அளித்திருந்தார்கள். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த 3 மாநிலங்களில் இருந்த பாஜக அரசு ஓய்வின்றி உழைத்தது. '' என்று கூறியள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களை நாங்களே ஆய்வு செய்யக்கூடிய நேரம் இது. கட்சி தொண்டர்கள் மிகவும் நேர்மையாக தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.