ராட்ச ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் 12 பேர் காயம்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்ச ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு ப்ரீ பால் டவர் எனப்படும் ஒரு ராட்ச ராட்டினம் உள்ளது.
உயரமான இந்த ராட்சத ராட்டினத்தில் சுற்றலாப் பயணிகள் அமர்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக மேலே சென்று, அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும். இந்த ராட்டினத்தில் வழக்கம்போல், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏறி உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள ‘ரோப்' திடீரென அறுந்ததால் அந்த ராட்டினம் கீழே விழுந்தது.
எனினும், தரையை நெருங்கி ராட்டினம் வந்ததாலும், குறைந்த உயரத்தில் இருந்து ‘ரோப்' அறுந்து விழுந்ததாலும் அதில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த ராட்டினம் உயரத்தில் இருக்கும் போது ‘ரோப்' அறுந்து விழுந்து இருந்தால் அதில் இருந்தவர்களின் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக அந்த பூங்காவை தற்காலிகமாக மூட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பொழுதுபோக்கு பூங்காவின் ராட்ச ராட்டினம் கீழே விழுந்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.