This Article is From May 23, 2020

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது; கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கருத்து

உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்துக்கொண்டு என்னை கைது செய்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது. 

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது; கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கருத்து

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது; கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கருத்து

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.  

சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் இன்று அதிகாலை சென்ற போலீசார் அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதாக சமூகவலைதளங்களில் திரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த நாளே ஊடகங்களுக்கு முன் அதற்கு பதில் கூறினேன். ஏறத்தாழ 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்று அதிகாலையிலே கைது செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். 

அதற்கு காரணம் நேற்று மாலையில் ஓபிஎஸ் செய்துள்ள ஊழல் குறித்து புகார் அளித்துள்ளேன். தற்போது கூட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஒரு புகார் தயார் செய்து கொண்டு இருக்கிறோம். அதாவது, கொரோனாவுக்கு கிருமிநாசினி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ஒரு கிருமிநாசினியின் விலை ரூ.4000. ஆனால், அதனை ரூ.14,000க்கு வாங்கியுள்ளனர். 2 நாட்களில் ஏறத்தாழ ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக கோயம்பத்தூரில் ரசீது கொடுத்துள்ளர். அதனை உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்துக்கொண்டு என்னை கைது செய்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது. 

என் பின்னால் வழக்கறிஞர் அணி உள்ளது. நான் சிறையில் இருந்தாலும், நாளைய தினம் நிச்சயம் எஸ்.பி.வேலுமணி மீது புகார் மனு அளிக்கப்படும். கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறியும் என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்காக நான் பரிதாபப்படுகிறேன். யாரையோ திருப்திப்படுத்த இந்த அதிகாரிகளை பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே அதிகாரிகள் இன்னும் சில மாதங்களில் எங்களுக்கு பாதுகாப்பாக வருவார்கள். இதையெல்லாம் ஐந்து முறை பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

.