பிரதமரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஆனந்த் டெல்டும்ப்டே பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது
Mumbai: கடந்த 2018-ல் புனே அருகே உள்ள பீமா-கொரேகானில் லட்டசக் கணக்கான தலித்துகள் பங்கேற்ற நிகழ்வில் வன்முறை நிகழ்ந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் நாடு முழுவதும், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பரவலாக கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தலித் எழுத்தாளரும், அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் பத்திரிக்கையாளர் கௌதம் நவலாகா ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு முகமை(NIA) வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் நேற்று சரணடைந்தனர்.
2018 ஜனவரி 1-ம் தேதி நடந்த பீமா-கொரேகான் நிகழ்வில் ஏற்பட்ட வன்முறைக்கு டிசம்பர் 31, 2017 அன்று புனேவில் எல்கர் பரிஷத் கூட்டமே காரணம் என்று காவல்துறையினர் கருதியிருந்தனர். இந்த கூட்டத்திற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி தேசிய பாதுகாப்பு முகமை நாடு முழுவதும் விரிவான விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில் ஆனந்த் டெல்டும்டே வீட்டில் காவலர்கள் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், அது மாவோயிஸ்ட்டுகளுடனான தொடர்பினை கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தனர். இதன் அடிப்படையில் ஆனந்த் மீது வன்முறைக்குச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரதமரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஆனந்த்தின் பங்கு இருப்பதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
“2018 ஆகஸ்ட் மாதத்தில் கோவா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் எனக்களித்த வீட்டினை ரெய்டு செய்த அந்த பொழுதிலிருந்தே என்னுடைய வாழ்க்கை தாறுமாறாக மாறிவிட்டது. என்னுடைய எந்த ஒரு கெட்ட கனவிலும் எனக்கு இது நேரும் என நான் காணவில்லை.” என ஆனந்த சரணடைவதற்கு முன்பு ஒரு திறந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “நான் பெற்ற அறிவை என்னுடைய எழுத்துகளில் வடித்தும் மக்களுக்கு எவ்வளவு உதவ முடியுமோ அதை செய்தும் வருகிற சாதாரண நபர் நான். ஒரு ஆசிரியராக, சிவில் உரிமைப் போராளியாக, அறிவுஜீவியாக, கார்ப்பரேட் உலகில் பல்வேறு பதவிகள் என இந்நாட்டில் நான் 50 வருடங்களாக எந்தவித கறையும் இன்றி வாழ்ந்துவருகிறேன். வன்முறையை தூண்டும் விதமாக, வன்முறையை ஆதரிப்பதாக நான் எழுதிய 30 புத்தகங்களிலோ, அல்லது உலகளவில் பிரசுரிக்கப்பட்ட என்னுடைய எண்ணற்ற கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ, கருத்துரைகளிலோ நீங்கள் எதுவும் காண முடியாது.” என்று ஆனந்த குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் இப்போது தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கைதாகிறேன். என்னால் அடுத்து உங்களுடன் எப்போது பேச இயலும் என்பது தெரியாது. ஆனால், எனக்காக மட்டுமல்ல உங்களுக்காகவும் உங்கள் தருணம் வரும் வரை காத்திராமல் பேசத் தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.” என்று தனது கடிதத்தினை முடித்துள்ளார்.
இதே போன்ற வழக்கில் 9 ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாவோயிஸ்ட்டுகளுடனான தொடர்பில் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.
“இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் கணினிகளில் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 13 கடிதங்களில் 5ல் இருந்து நான் குற்றவாளி என கண்டதாக காவல்துறை சொன்னது. என்னிடமிருந்து எதுவும் (எந்தக் கடிதமும்) கைப்பற்றப்படவில்லை. அக்கடிதங்களில் வரும் ஒரு பெயரான “ஆனந்த்” என்பது என்னையே சுட்டுகிறது என காவல்துறை சொல்கின்றது. ஆனந்த் என்னும் பெயர் இந்தியாவில் வெகு சாதாரணமாக வைக்கப்படுகிற பெயர் என தெரிந்தும் காவல்துறை பிசகின்றி என்னையே அது சுட்டுவதாகத்” தெரிவித்தார்.
ஆனந்த் பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. தேசிய புலனாய்வு முகமையிடம் அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் கூறியது.
நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களைக் கொண்ட இந்த வழக்கை விசாரித்தது. அந்தச் சட்டத்தின் பிரிவு 43D (4)-ன் கீழ், இதுபோன்ற வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று அந்த அமர்வு கூறியதையடுத்து ஆனந்த் டெல்டும்டே மற்றும் பத்திரிக்கையாளர் கௌதம் நவலாகா ஆகியோர், அம்பேத்கர் ஜெயந்தியான நேற்று தேசிய பாதுகாப்பு முகமையிடம் சரணடைந்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு தேசிய அளவில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது.
மகாராஷ்டிரா மாநில காவல் துறையின் விசாரணையிலிருந்த இந்த வழக்குகள், மாகராஷ்டிரா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேசிய பாதுகாப்பு முகமையிடம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.