This Article is From Jul 08, 2019

“சொல்றதைக் கேளு… இல்லைனா”- கடத்தப்பட்ட முகிலனின் வாக்குமூலம்!

முகிலன் திரும்பி வந்துவிட்டாலும், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை

“சொல்றதைக் கேளு… இல்லைனா”- கடத்தப்பட்ட முகிலனின் வாக்குமூலம்!

“என்னை கடத்திச் சென்றது யார் என்று தெரியவில்லை. கடத்தப்பட்ட அத்தனை நாட்களும் என் கண்கள் கட்டப்பட்டிருந்தன"

சமூக செயற்பாட்டாளரான போராளி முகிலன் காணாமல் போன வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா காவல்துறையினர் பிடியில் முகிலன் சிக்கியிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் காணொளி ஒன்று  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 140 நாட்களாக முகிலன் எங்கிருந்தார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. 

முகிலன் குறித்து வெளியான காணொளியைத் தொடர்ந்து, அவர் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவே, மாஜஸ்திரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டார் முகிலன். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கச் சொல்லி உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். இதன் தொடர்ச்சியாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முகிலன். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், “என்னை கடத்திச் சென்றது யார் என்று தெரியவில்லை. கடத்தப்பட்ட அத்தனை நாட்களும் என் கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரெயொரு முறைதான் கண்கள் திறக்கப்பட்டு, ஒருவரிடம் பேச அனுமதிக்கப்பட்டேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருவதாகக் கூறினார்கள். வெளிநாட்டுக்குப் போய்விடுமாறு வற்புறுத்தினார்கள். 

அவர்களின் இந்தப் பேச்சுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து யாரும் என்னிடம் சரியாக பேசவில்லை. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே தவித்தேன். என் மனைவி, பிள்ளை கூட இறந்துவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு செய்தித் தாள் ஆதாரங்களையெல்லாம் என்னிடம் காட்டினார்கள். நேற்று இரவு வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றுதான் நினைத்தேன். தற்போதுதான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. 

என்னைக் கடத்தியவர்கள், ‘நாங்கள் சொல்றதை ஒழுங்கா கேளுங்க. இல்லைனா, உங்கள ரொம்ப அசிங்கப்படுத்திடுவோம். உங்களோட குடும்பத்தில இருக்கிறவங்க, உங்களோட நண்பர்கள் என எல்லோரையும் அசிங்கப்படுத்துவோம்'-னு மிரட்டினாங்க” என்றார். 

தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர், “உங்களை யார் கடத்தினார்கள்?” என்று கேட்டதற்கு, “நான் கடத்தப்பட்டதில் இருந்து இப்போது நடந்த வரை அனைத்தையும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமாக தெரிவிப்பேன். அவர்கள் எல்லாவற்றையும் கேட்க வேண்டும். போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணை இல்லாமல் நான் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை” என்று முடித்துக் கொண்டார். 

முகிலன் திரும்பி வந்துவிட்டாலும், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அவர் பாலியல் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார் முகிலன். அந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் முகிலன் திடீரென காணாமல் போனார். 

.