பூன்வாலா, ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை மறுக்கத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
New Delhi: விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியாக இருந்த காரணத்தால், அருண் ஜெட்லி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ஷேசாத் பூன்வாலா என்கின்ற செயற்பாட்டாளர், ‘கடந்த 2013 ஆம் ஆண்டு, ராகுல் காந்தி, நிரவ் மோடியை சந்தித்தார்’ என்று பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல், ‘நாடாளுமன்றத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அருண் ஜெட்லியை சந்தித்து மல்லையா பேசியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு கிரிமினலை அவர் ஏன் சந்தித்து பேச வேண்டும். மல்லையாவுடன் அவர் என்ன பேசினார் என்பதை ஜெட்லி தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
இதனை மறுத்த அருண் ஜெட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் மல்லையாவை சந்திப்பதற்கு நான் எந்தவொரு அப்பாயின்ட்மென்டும் வழங்கவில்லை. இதனால் அவர் என்னை சந்தித்தார் என்ற கேள்வியே எழக்கூடாது. ஒரு எம்.பியாக இருந்தபோதிலும் மல்லையா தனது சலுகைகளை தவறாக பயன்படுத்தினார். ஒருமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி எனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மல்லையா என்னை மறித்து, கடனை திரும்ப செலுத்த எனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டு, வங்கிக் கடனை உடனே செலுத்துமாறு கண்டிப்புடன் கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவாகரம் பூதாகரம் எடுத்து வரும் நிலையில், செயற்பாட்டாளர் பூன்வாலா அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘அருண் ஜெட்லி, மல்லையாவை சந்தித்ததற்கு பி.எல்.புனியா தான் ஆதாரம் என்றால், ராகுல் காந்தி - நிரவ் மோடியை சந்தித்ததற்கு நான் தான் ஆதாரம். ராகுல், 2013 ஆம் ஆண்டு, நிரவ் மோடி ஒருங்கிணைத்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். 11 செப்டம்பர், 2013-ல் ராகுல், நிரவ் மோடியைப் பார்க்கவில்லை என்று கூறட்டும். இது குறித்து எந்த சோதனையையும் நான் எதிர்கொள்ளத் தயார்’ என்று சவால் விட்டுள்ளார்.