Ranchi: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது. இது இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ‘அவசர நிலையை நோக்கி நாட்டை அழைத்துச் செல்கிறார் மோடி’ என்று கூறியுள்ளார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது இன்று விசாரிக்கப்பட்டது. வரும் 5 ஆம் தேதிக்குள், கைதுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 5 செயற்பாட்டளர்களும் வரும் 6 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.
மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர்தான் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவுக்கு, மருத்துவக் காரணங்களுக்காக 6 வார காலம் பரோல் வழங்கியது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். இந்த நேரத்தில் பொது நிகழ்ச்சிகளிலோ அரசியல் விவகாரங்களிலோ அவர் பங்கெடுப்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரோலை 3 மாத காலம் நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் லாலு. அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே வரும் வியாழக்கிழமை அவர் ராஞ்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் செயற்பாட்டளர்களை கைது குறித்து லாலு, ‘மோடிஜி அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளார். அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், செயற்பாட்டளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதேபோல பாஜக அல்லாத கட்சியினர் மீதும் தேவையற்ற கைது நடவடிக்கை நடத்தப்படுகிறது. மோடி தலைமையிலான அரசு நாட்டை அவசர நிலைக்கு இட்டுச் செல்கிறது. வரும் 2019 ஆம் ஆண்டு, பாஜக எதிர்க்கட்சிகளை சந்திக்க விரும்பவில்லை என்று தெரிகிறது’ என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.