This Article is From Aug 30, 2018

செயற்பாட்டளர்கள் கைது: ஐமுகூ ஆட்சியை கை காட்டும் உள்துறை அமைச்சகம்!

நக்சல்களின் செயல்பாடுகளால், நாட்டின் பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளது

செயற்பாட்டளர்கள் கைது: ஐமுகூ ஆட்சியை கை காட்டும் உள்துறை அமைச்சகம்!
New Delhi:

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று முன் தினம் 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது. இது இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சகம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மத்தியில் ஆட்சி புரிந்த போதே, 128 அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்திருந்தது. மேலும், அந்த அமைப்புகளுடன் செயற்பாட்டளர்கள் தொடர்பில் இருந்ததால் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது, மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தது என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

‘2012, டிசம்பர் மாதம் ஐமுகூ அரசு, 128 அமைப்புகளை சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக வரையறுத்தது. அப்போது, அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. வரவர ராவ், சுதா பரத்வாஜ், சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், அருண் ஃபெரேரா, வெர்னான் கோன்சால்வஸ், மகேஷ் ராவத் ஆகியோர் பட்டியலிடப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்’ என்று உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஃபெரேரா மற்றும் கோன்சால்வஸ் ஆகியோர் கடந்த 2007 ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். அதைப் போலவே, வரவர ராவ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா காவல் துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து எதேச்சதிகார இடதுசாரிகள் அமைப்புகளை கண்காணிக்கும் அதிகாரி ஒருவர், ‘இந்த செயற்பாட்டளர்கள், தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். அந்த அமைப்புடைய எண்ணம், ஜனநாயகத்தை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான். இந்நிலையில் நகர்ப்புறத்தில் மாவோயிஸ்ட்களுக்காக செய்யப்படும் வேலைகள் மிக முக்கியமானவை. தொழில்நுட்பம், தகவல் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை நகரத்தில் இருக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள்தான் செய்வர்’ என்று விளக்கியுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து மாவோயிஸ்ட்கள் 6,956 பொது மக்களையும், 2,517 பாதுகாப்புப் படையினரை கொன்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நக்சல்களின் செயல்பாடுகளால், நாட்டின் பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செயற்பாட்டளர்கள் கைது குறித்து புனே போலீஸ், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்பித்துள்ளனர்.

.