This Article is From Nov 12, 2019

‘’வயதாகி விட்டதால் கட்சி தொடங்கியுள்ளார்’’ - கமலை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!!

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

‘’வயதாகி விட்டதால் கட்சி தொடங்கியுள்ளார்’’  - கமலை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!!

வயதாகி விட்டதால் கமல், ரஜினிகாந்த் போன்றோர் கட்சி தொடங்கியுள்ளதாகவும், அரசியலில் அவர்களுக்கு என்ன தெரியும் என்றும் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் அரசியல் ஆளுமை வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இதே கருத்தை புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தங்களது பேட்டிகளில் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வெற்றிடம் இருப்பதாக கூறுபவர்கள் ஏன் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை?. கமல்ஹாசன் மிகப்பெரிய தலைவர்தானே?. அவர் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே?. நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் எத்தனை ஓட்டுகள் வாங்கினார்?.

வயது முதிர்வு காரணமாகவும், திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாததாலும் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது தவறல்ல. ஆனால் மற்றவர்களை குறைசொல்லி பேசுவதுதான் தவறானது.

இத்தனை காலமாக அவர் எங்கு போனார்? மக்களுக்கு அவர் என்ன பணி செய்திருக்கிறார்? திரைப்படத்தில் நடித்தார்; சம்பாதித்தார். இன்று வரைக்கும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட மிகப்பெரும் நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேர்தலை சந்தித்துவிட்டு என்ன நிலைக்கு ஆளானாரோ அதே நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும்.

தனது கட்சியை சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்தாலே போதும் என்ற நிலைமைக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். அரசியலில் அவருக்கு என்ன தெரியும்? என்ன அடிப்படை தெரியும்?

இவ்வாறு  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

.