This Article is From Feb 27, 2020

'மத்திய அரசைக் கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!

டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 180-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

'மத்திய அரசைக் கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!

டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ''வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும்''
  • ''உளவுத்துறையின் தோல்விதான் வன்முறைக்கு காரணம்''
  • ''இனிமேலாவது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருக்கும் என நம்புகிறேன்''

டெல்லியில் வன்முறை நடந்திருப்பதற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

 டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். 

டெல்லி வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உளவுத்துறை தோல்வியடைந்திருக்கிறது என்றால் அது உள்துறையின் தோல்வி என்று பொருள் கொள்ள வேண்டும்.

சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரால் மக்களைத் தூண்டி வருகின்றனர். இது சரியான போக்கே கிடையாது. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். 

எனக்குத் தெரிந்தவரையில் குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படாது. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும், அதனால் பிரயோஜனம் ஏற்படாது. உடனே நான் பிஜேபியின் ஊதுகுழல், நான் பிஜேபி ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்த விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. நான் என்ன உண்மையோ அதைச் சொல்கிறேன். அவ்வளவுதான். 

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

.