மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதற்கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ரூ. 300 கோடி வரையிலான வருமான மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாட்டில் 05-02-2020 அன்று பிரபல நடிகர், படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில் இவர்களது கூட்டு முயற்சியில் வெளிவந்த திரைப்படம் ரூ. 300 கோடி வரையில் வசூலித்திருந்தது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 38 இடங்களில் சோதனை நடந்தது.
குறிப்பிடும் வகையில் படத்தின் பைனான்சியருக்கு சொந்தமான ரூ. 77 கோடி ரொக்கப்பணம் சென்னை மற்றும் மதுரையில் ரசகசிய இடங்களில் வைத்து கைப்பற்றப்பட்டது. அதிக எண்ணிக்கையில் சொத்து ஆவணங்கள், அடமானப் பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணையின்போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடி வரையிலான வருமானம் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
படத்தின் விநியோகஸ்தர் கட்டுமான பணியை செய்து வருகிறார். அவரக்கு சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் சில படங்களை தயாரித்திருப்பதுடன் மல்டிப்ளக்ஸ்களை நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
ரசீதுகள், வரவு செலவு கணக்குகள், படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவற்றையும் விசாரிக்கிறோம்.
பிரபல நடிகரின் அசையா சொத்துக்களில் முதலீடு செய்தது, தயாரிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட ஊதியத்தொகை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களில் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்படும் படம் பிகிலையும், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தையும், பைனான்சியர் மதுரை அன்புச் செழியனையும் குறிக்கிறது. இவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதற்கொண்டு வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெய்டு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.