திமுக, 23 இடங்களை வென்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்ததில் தமிழக அளவில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திமுக, 23 இடங்களை வென்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் திமுக-வுக்குத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்படி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் விஷால், “திமுக ஜெயிக்கணும்னுதான் மக்கள் ஆசைப்பட்டிருக்காங்க. மக்களோட எண்ணம்தான் தேர்தல் முடிவுகள்ல பிரபலிச்சிருக்கு. நான் ஸ்டாலின் அங்கிள்னு கூப்பிட்டுப் பழகிட்டேன். ஆனால், இந்த இடத்தில அப்படி சொல்ல முடியாது. ஸ்டாலின் சாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர் தலைமையில தமிழகத்துக்கு பெரிய மாற்றம் வரும்னு நம்புறேன்” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மொத்தமாக 52 இடங்களைக் கைப்பற்றியது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.