பிரபல நடிகை ஐஷ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்த அவர், தற்போது மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. முன்னதாக ஐஷ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், அவரின் மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அமிதாபின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை.
இந்த வாரத் தொடக்கத்தில் இது குறித்து ட்விட்டர் மூலம் கூறிய அபிஷேக், “ஐஷ்வர்யா மற்றும் ஆராத்யாவுக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து வருகிறது. என் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி,” எனக் கூறியிருந்தார்.
கடந்த வாரமே அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இது குறித்து அமிதாப், “கோவிட் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. மருத்துவமனை சார்பில் அரசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், எங்கள் குடும்பத்துக்காக பணி செய்து வருபவர்களுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அபிஷேக் பச்சன், “எங்களைப் பார்த்துக் கொள்ளும் மருத்துவர்கள் அனுமதிக்கும் வரை நானும் என் தந்தையும் மருத்துவமனையில்தான் இருக்க உள்ளோம். அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்” என வலியுறுத்தினார்.
நானாவதி மருத்துவமனையில்தான் அபிஷேக் மற்றும் அமிதாப் ஆகியோர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்காக அமிதாப் சிகிச்சைப் பெற்று வந்தாலும், சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து ஆக்டிவாகவே இருந்து வருகிறார். தன்னைப் பற்றி விசாரித்த மற்றும் தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வர வாழ்த்திய அனைவருக்கும் அவர் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்திருந்தார்.