தொண்டர்கள் எப்போதும் அமமுகவிலேயே இருப்பார்கள்
நிர்வாகிகள் விலகுவதால் அமமுக நிலைகுலைந்துவிடாது என்றும் தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் நேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தல், மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படு தோல்வியை சந்தித்தது. இதேபோல், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். இதையடுத்து, தங்க தமிழ்செல்வன் டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இந்நிலையில், அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக வேறு ஒரு கொள்கை பரப்புச்செயலாளரை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று டிடிவி தினகரன் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் நேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.
இதனிடையே, தங்க.தமிழ்ச்செல்வன் விலகலை தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் மதுரையில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமியை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறும்போது, அதிமுக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளார்.
நிர்வாகிகள் கட்சி மாறுவதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை. தொண்டர்கள் எப்போதும் அமமுகவிலேயே இருப்பார்கள். அதிமுக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை். மாறாக அவர்கள் ஆட்சியின் மீது குறியாக இருக்கிறார்கள். குடிநீர் பஞ்சத்தை மறைக்கவே தங்க தமிழ்ச்செல்வன் விலகியதை பூதாகரமாக காட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.