அறிக்கையில் சிறுபான்மையினருக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறுபான்மையின சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலை நாட்ட அதிமுக எப்போதும் உறுதியாகப் பாடுபடும்.
சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காகப் பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும் குறிப்பாக இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு நாளுக்கு நாள் மக்களின் பேராதரவு பெருகி வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் பிரசாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமியச் சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுக அரசு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்குத் தொண்டு செய்து வருவதும் அதிமுக அரசுதான்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியச் சமூகத்திற்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் எந்தவொரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷம பிரசாரங்களைச் செய்து சுயலாபம் அடையச் சதித் திட்டம் தீட்டிச் செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.