This Article is From Apr 30, 2019

தங்கமங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by


கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

திருச்சி அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு, திமுக சார்பில் ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அதே போன்று பிரபலங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அவருக்கு நிதியுதவிகள் அளிக்கவும் முன்வந்துள்ளனர்.

Advertisement

எனினும், தமிழகம் திரும்பிய கோமதிக்கு தமிழக அரசு உரிய வரவேற்பு கூட அளிக்கவில்லை என்றும், அவருக்கு எந்த பரிசுத்தொகையையும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, தேர்தல் விதிகளால் தங்க மகள் கோமதிக்கு அரசால் உதவ முடியவில்லை என்றார். மேலும், வீராங்கனை கோமதி விரும்புகிற அளவுக்கு, அவருக்கு உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, தேர்தல் விதிகள் அமல் காரணமாக கோமதிக்கு அரசு நிதி உதவி அறிவிக்கவில்லை என்றாலும் அதிமுக சார்பில் ஏன் நிதி உதவி வழங்கப்படவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement