This Article is From Aug 20, 2020

விநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக!

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க...

விநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக!

ராஜாவை சாடும் வகையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், ‘ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல் - நவீன திருவள்ளுவர்.’ என சூசகமாக விமர்சித்தார். 

ஹைலைட்ஸ்

  • விநாயகர் சதூர்த்திக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை
  • கொரோனா பரவலைத் தடுக்க இந்த உத்தரவு
  • இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவினை, பொது இடங்களில் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னொரு ஆணையினைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த முடிவால் இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அதிருப்தியடைந்துள்ளனர். அரசின் முடிவையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு' என ட்விட்டரில் முதலாவதாக பொங்க, 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், ‘நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு. மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை. சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்' என்று ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார். 

அதிமுகவின் முக்கியப் புள்ளி இப்படி சொல்லியதை அடுத்து, தமிழக பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், சிடிஆர் நிர்மல் குமார், ‘முந்தானைக்கு பின்னால் ஒளிந்து 30 வருடங்களாக தலை நிமிராமல் இருந்த ஆண்மை. டெல்லியில் பாரதத்தின் தலைமகனை சந்தித்தபின் தலைநிமிர்ந்த ஆண்மையை நினைத்து பெருமை கொள்ளுங்கள்' என வரிந்து கட்டினார். 

ராஜாவை சாடும் வகையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், ‘ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல் - நவீன திருவள்ளுவர்.' என சூசகமாக விமர்சித்தார். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொது மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.