This Article is From Jul 06, 2019

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு சீட்டையும் திமுக ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.