தமிழகத்தில் ஆட்சி பறிபோனால் அதிமுக கட்சியே இருக்காது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதில் அவரது ஆதரவாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் சேர்ந்திருக்கிறார். இதனால் தங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தினகரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் கூறியதாவது-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றைக்கும் அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். மீதியுள்ள தொண்டர்களும் எங்கள் பக்கம் வந்து சேர்வார்கள்.
துரோகிகளுடன் நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் ஆட்சி போய்விட்டால் அதிமுக கட்சியே இருக்காது. அக்கட்சியினர் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.