This Article is From Mar 19, 2019

‘இந்த கப்பல் கரை சேராது!’- அதிமுக-வுக்கு எதிராக வெடிக்கும் மாஜி எம்.எல்.ஏ

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

Advertisement
இந்தியா Written by

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அதிமுக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பதவியை ராஜினாமா செய்துள்ளேன்’ என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அதிமுக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பதவியை ராஜினாமா செய்துள்ளேன்' என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி அதிமுக-வில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். தெற்கு மாவடத்திற்கு சண்முகநாதன் செயலாளராக இருந்து வருகிறார். இதில் மார்க்கண்டேயன், சண்முகநாதனுக்கு நெருக்கம் எனப்படுகிறது. கடம்பூர் ராஜூ, இவர்கள் இருவருக்கும் எதிரான நிலைபாட்டில் இருப்பவர் என்றூம் கூறப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில்தான், காலியாக இருந்த விளாத்திக்குளம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், மார்க்கண்டேயன், எப்படியும் தனக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பியிருக்கிறார். ஆனால், கடம்பூர் ராஜூ ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த மார்க்கண்டேயன், தனது செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களையும் சந்தித்து தனது அதிருப்திக்கான காரணத்தை விளக்கியுள்ளார். 

Advertisement

மார்க்கண்டேயன் பேசும்போது, ‘அதிமுக தலைமையில் குளறுபடி இருக்கிறது. இறங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் நல்ல தலைமைப் பண்பு உள்ளவர்களுக்கும் தேர்தலில் சீட் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, கடம்பூர் ராஜூ போன்ற ஆட்கள் கை காட்டும் நபருக்கு சீட் கொடுக்கப்படுகிறது. உட்கட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக வேலை செய்பவர் கடம்பூர் ராஜூ. அவருக்கு அனுபவம் கிடையாது. அவருக்கு மாவட்டச் செயலாளராக இருக்கத் தகுதி இல்லை. அதிமுக இப்படியே சென்றால், இந்த கப்பல் நீந்தி கரை சேராது. தேர்தலுக்குப் பின்னர், அதிமுக ஒரு தலைமையின் கீழ் வரும்' என்று சூசகமாக பேசினார். அதற்கு பத்திரிகையாளர்கள், ‘அந்த ஒரு தலைமையின் தலைவர் யார். சசிகலாவா?' என்றனர். 

அதற்கு மார்க்கண்டேயன், ‘அவர் சிறையில் இருக்கிறார். அவரைப் பற்றி இப்போதைக்குப் பேச விரும்பவில்லை' என்று முடித்துக் கொண்டார். அதிமுக-வில் சீட் கொடுக்காததால், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் அமமுக இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மார்க்கண்டேயனும் அந்தப் பக்கம் சாய்வாரா என்று தெரியவில்லை. ஆனால், இடைத் தேர்தலில் மார்க்கண்டேயன் களமிறங்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. 

Advertisement
Advertisement