This Article is From May 28, 2019

''குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' : ஸ்டாலின்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஏற்பட்டு வருகின்றனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

பருவமழை பொய்த்ததும், கோடை வெயிலும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-விற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமாக இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 
தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் “ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்” என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை அ.தி.மு.க ஆட்சியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும், மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்காததாலும் அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. 

Advertisement

பருவமழை தவறியவுடன் குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கவும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை முறைப்படி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு மோசமாகத் தவறி விட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பெறவும் அ.தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் முயற்சிக்கவில்லை. 

எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் ஊழல் ராஜ்யத்தை நடத்துவதில் மட்டுமே அ.தி.மு.க அரசு அதிகமான கவனம் செலுத்தியதால் இன்று ஒரு குடம் தண்ணீருக்கு கால் கடுக்க நின்று - அதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 

Advertisement

குடிநீருக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை மறியல்களும், போராட்டங்களும், குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஆனால் கோட்டையில் இருக்கும் முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல்- குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-விற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமாக இருக்கிறார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

இந்நிலையில் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அ.தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றிட முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச்சாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளை, அதிகாரிகளுடன் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனே ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் படும் இன்னல்களை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்க முடியாது.

Advertisement

ஆகவே கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே குடிநீர் இன்றி அவதிப்படும் தாய்மார்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கிட முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement